இங்கிலாந்தில், தனது சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரால் பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கில், குற்றவாளிகளுக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 12 வயதில் இருக்கும் அந்தச் சிறுமி, தனக்கு ஆறு வயதிலிருந்தே தனது தந்தை, தாத்தா மற்றும் இரண்டு சகோதரர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்கள் நடந்ததாக நீதிமன்றத்தில் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் துன்புறுத்தல்கள் அனைத்தையும் அறிந்திருந்த சிறுமியின் தாய், அதனைத் தடுக்காமல் இருந்ததோடு சிறுமிக்குக் கூடுதல் சித்திரவதைகளையும் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் இது குறித்து முறையிட்டபோது, அவர் சிறுமியைத் தாக்கி, வாய் டேப்பால் ஒட்டப்பட்டு, இரண்டு நாட்கள் பட்டினி போட்டு அலமாரியில் பூட்டி வைத்துள்ளார். மேலும், அந்தச் சிறுமியைச் சிகரெட்டுகளால் சூடு வைத்தும், குதிரைச் சாட்டையால் அடித்தும் அக்குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். தற்போது 12 வயதாகும் அந்தச் சிறுமி, வீட்டிற்குச் செல்லப் பயந்து தனது பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் இந்தத் துயரச் சம்பவங்களைத் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் அக்குடும்பத்தின் மொத்தக் கொடூர முகமும் வெளிச்சத்திற்கு வந்தது.

 இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது. அதன்படி தந்தை (43 வயது): 13 வயதுக்குட்பட்ட குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகத் தண்டிக்கப்பட்டார். தாய் (43 வயது): குழந்தைக் கொடுமை, சட்டவிரோத சிறைவைப்பு மற்றும் நீதியைத் திசைதிருப்பியதற்காகத் தண்டிக்கப்பட்டார். தாத்தா (70 வயது): பாலியல் தாக்குதல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார். சகோதரர்கள் (23 மற்றும் 20 வயது): பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தையைத் தவறான செயலுக்குத் தூண்டிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர். மனிதாபிமானமே இல்லாத இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஒரு குடும்பமே சிறைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.