இந்தூரில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்திலும் திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட மஞ்சள் பூசும் சடங்கு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு சடங்கின் போது உடலில் மஞ்சள் தேய்க்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் முழுவதும் கடுமையான அரிப்பு ஏற்பட்டு, சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றின.

மேலும் மணப்பெண்ணின் உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துயர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சளில் கலக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் அல்லது ஒவ்வாமை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்தூரில் இது போன்ற ஒரு சம்பவம் பதிவான நிலையில், தற்போது கர்கோனிலும் அதே போன்ற விபரீதம் நிகழ்ந்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சந்தையில் விற்கப்படும் கலப்பட மஞ்சள்கள் மற்றும் ரசாயனம் கலந்த அழகுப் பொருட்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற சடங்குகளின் போது இயற்கை முறையிலான பொருட்களைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.