உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை தட்டுப்பாட்டைப் போக்கவும், எகிறும் விலையைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதன்படி, 2026 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பதப்படுத்தப்படாத சர்க்கரை, வெள்ளை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என அனைத்து ரகங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
கடந்த மாதம் சர்க்கரை உற்பத்தி கணிசமாகக் குறையும் என மதிப்பிடப்பட்ட நிலையில், ‘கட்டுப்படுத்தப்பட்ட’ ஏற்றுமதி என்ற நிலையிலிருந்து ‘தடைசெய்யப்பட்ட’ நிலைக்குக் கொள்கையை மாற்றியுள்ளது மத்திய அரசு. மே 13-க்கு முன் கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் என்பதால், இந்தத் தடையால் உலகச் சந்தையில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உரத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் வரும் காலங்களில் சர்க்கரை உற்பத்தி மேலும் குறையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு குறைந்தால் 2026-27 பருவத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கவலை எழுந்துள்ளது.
இதனால் உள்நாட்டு நுகர்வுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ‘முன்னெச்சரிக்கை’ தடையை அரசு விதித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு வழக்கமான ஒதுக்கீட்டின் கீழ் சர்க்கரை ஏற்றுமதி செய்யத் தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென விதிக்கப்பட்ட இந்தத் தடையால் ஏற்கனவே ஒப்பந்தம் போட்டிருந்த வர்த்தகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
