தண்ணீர் தட்டுப்பாடு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் “தண்ணீர் தயாரிக்கும் முறை” என்று ஒரு விசித்திரமான சமையல் வீடியோவைப் பகிர்ந்து இணையதளத்தையே அதிர வைத்துள்ளார். ‘Baawarchi mUmmA’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தப் பெண் மிகவும் சீரியஸான முகபாவனையுடன் தண்ணீர் தயாரிக்கும் வினோத ரெசிபியை விளக்குகிறார். ஒரு குக்கிங் ஷோ போலவே ஆரம்பிக்கும் இந்த வீடியோவில், “தண்ணீரைச் சூடுபடுத்தி அதில் ஐஸ் க்யூப்களைப் போடுங்கள், அதன் சுவை பிடிக்கவில்லை என்றால் இன்னும் இரண்டு ஐஸ் கட்டிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் சொல்லும் அட்ராசிட்டி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த வேடிக்கையான வீடியோவில், “நீங்கள் சமையலுக்குப் புதியவர் என்றால் தண்ணீரை ஸ்பூனால் கிளறிக்கொண்டே இருங்கள்” என்றும், பிறகு அதில் குழாய் தண்ணீர், மினரல் வாட்டர் மற்றும் ஃபில்டர் வாட்டர் என ஒவ்வொன்றாகச் சேர்த்து ‘தண்ணீர் ரெசிபி’யை அவர் முடிக்கும் விதம் பார்ப்பவர்களைச் சுருண்டு விழ வைக்கிறது. செயற்கை முறையில் தண்ணீரை உருவாக்க முடியாது என்ற உண்மையை இவ்வளவு நையாண்டியாகப் பேசியுள்ள அந்தப் பெண்ணின் வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து செம வைரலாகி வருகிறது.