உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முன்மாதிரியான சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் நிறுவனங்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையையும் பாதியாகக் குறைக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, பாதுகாப்புவிதிமுறைகளில் எவ்வித சமரசமும் இன்றி தேவையற்ற வாகனங்கள் மட்டும் அணிவகுப்பிலிருந்து நீக்கப்பட உள்ளன.

மேலும், தனது பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் மின்சாரக் கார்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் யோசனை வழங்கியுள்ளார். குறிப்பாக, இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்கள் எதையும் விலைக்கு வாங்கக் கூடாது என்றும், ஏற்கனவே இருப்பில் உள்ள வாகனங்களையே முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புஆகியவற்றை முன்னிறுத்தி பிரதமர் எடுத்துள்ள இந்த ‘புளூ புக்’ விதிமுறை மாற்றங்கள், அரசு நிர்வாகத்திலும் பொதுமக்களிடமும் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.