ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தி தற்போது மூடப்பட்டுள்ளதால் உலகளவில் கடும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவிற்கு ஈரான் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
“அமெரிக்கா மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், எங்களிடம் உள்ள யுரேனியத்தை 90 சதவீதம் வரை சுத்திகரிப்போம்” என்று ஈரான் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரஜாய் தெரிவித்துள்ளார்.
பொதுவாக 90 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட யுரேனியம் என்பது அணுக்குண்டு தயாரிப்பதற்கு இணையானது என்பதால், இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் யுரேனியம் சேமிப்புத் திறன் அழிந்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது ஈரான் விடுத்துள்ள இந்த மிரட்டல் அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் மூலமாக அமெரிக்கா அனுப்பிய தூதுக்கு ஈரான் பதில் அளித்துள்ளது.
தங்களின் ’14 அம்ச கோரிக்கைகளை’ அமெரிக்கா ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஈரான் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளது. இந்த மோதல் போக்கு மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உருவாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
