மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், தங்க இறக்குமதியைக் குறைக்கவும் ஓராண்டிற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பால் நகை நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அசோக் சோந்தாலியா இதற்கு ஒரு தீர்வை முன்மொழிந்துள்ளார்.
அரசுக்குத் தங்கம் இறக்குமதி செய்வதில் உள்ள கவலையை நாம் போக்க வேண்டும் என்றும், அதற்குப் புதிய தங்கம் வாங்குவதற்குப் பதிலாக மக்களிடமும், கோவில்களிலும், வங்கிகளிலும் முடங்கிக் கிடக்கும் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டைட்டன் மற்றும் தனிஷ்க் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பழைய தங்கத்தை மாற்றும் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய சோந்தாலியா, இத்தகைய பழைய தங்கப் பரிமாற்ற முறைகள் மூலம் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த வேண்டுகோள் நகைத்துறையில் வேலை செய்யும் லட்சக்கணக்கான பணியாளர்களைப் பாதிக்குமா என்பது குறித்து அடுத்த சில வாரங்கள் அவதானித்த பிறகே தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த அறிவிப்பின் தாக்கத்தால் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக கடும் வீழ்ச்சியைக் கண்டு முதலீட்டாளர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
