இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியைப் பற்றி அவதூறாகப் பேச தனக்குப் பணம் தர முன்வந்ததாக ஜெர்மனி மாடல் லிஸ்லாஜ் தெரிவித்துள்ள விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அவர் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடல் லிஸ்லாஜ் பதிவிட்டிருந்த ஒரு புகைப்படத்தை விராட் கோலி ‘லைட்’ (Like) செய்திருந்தார். 273 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட கோலியின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பல ஊடக நிறுவனங்கள் தன்னைத் தொடர்பு கொண்டதாக லிஸ்லாஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கோலியின் ‘லைக்’ சம்பவத்திற்குப் பிறகு, இந்தியாவின் சில ஊடக நிறுவனங்கள் என்னை அணுகின. விராட் கோலிக்கு எதிராகப் பேசுமாறும், அவருக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்குமாறும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். இதற்காக எனக்குப் பெரிய தொகையைச் சன்மானமாக வழங்கவும் அவர்கள் முன்வந்தனர்.
இந்தத் தவறான செயலுக்கு தான் உடன்படவில்லை எனத் தெரிவித்த லிஸ்லாஜ், “விராட் கோலி எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர். அவருக்கு எதிராக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன். அதனால் அந்த வாய்ப்புகளை நான் உடனடியாக நிராகரித்துவிட்டேன். அவர் எனது ரீல்ஸ் வீடியோவை லைக் செய்தபோது நான் ஆச்சரியப்பட்டதோடு நெகிழ்ச்சியும் அடைந்தேன் என்று கூறினார்.
விராட் கோலியின் புகழைப் புகழ்ந்து பேசிய அவர், கோலியை கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுடன் ஒப்பிட்டார். ஆசியாவைப் பொறுத்தவரை மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு நிகரான செல்வாக்கு கோலிக்கு உள்ளது. அவரைப் பற்றிய ஒரு சிறிய விஷயம் கூட உலக அளவில் பெரிய செய்தியாக மாறுகிறது. கோலிக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் அவர் மீதான ஈர்ப்பு வியக்கத்தக்கது என லிஸ்லாஜ் புகழாரம் சூட்டியுள்ளார். கோலியைத் திட்டமிட்டுச் சிக்க வைக்க முயற்சி நடந்ததாக மாடல் வெளிப்படையாகக் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
View this post on Instagram
