தமிழகச் சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு, இன்று பல்வேறு வரலாற்றுத் தருணங்களுடன் களைகட்டியுள்ளது.

இன்றும் கம்பீரமான ‘கோட்-சூட்’ உடையில் முதலமைச்சர் விஜய் அவைக்கு வருகை தந்தது அங்கிருந்த அனைவரது பார்வையும் அவர் பக்கம் திருப்பியது. இன்றைய கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசியல் மரபுப்படி அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் இணைந்து, ஜே.சி.டி.பிரபாகரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

புதிய சபாநாயகருக்கு முதலமைச்சர் விஜய் மற்றும் உதயநிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சட்டமன்ற வரலாற்றில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த இந்த நாகரிகமான காட்சி, அரசியல் களத்தில் ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது