தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மேலும் கடந்த 60 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய ஆட்சி அமைந்திருப்பது தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது. விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையிக் தலைநகர் சென்னையில் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இதைக் கொண்டாடும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி திரைகளை அமைத்திருந்தனர்.

இதனால் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த இந்தத் திரைகளில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற காட்சியைத் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் நேரலையில் கண்டு களித்தனர். விஜய்யின் இந்த வரலாற்று வெற்றியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.