இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், களத்தில் ஆட்டங்கள் விறுவிறுப்பாகவே அமைந்துள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ஐபிஎல் நிர்வாகத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டிகளைக் காண்பவர்களின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் வரை சரிந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒளிபரப்பு உரிமம் கோடிக்கணக்கில் விற்கப்பட்டுள்ள நிலையில், இந்த டிஆர்பி சரிவு விளம்பரதாரர்களையும் கவலையடையச் செய்துள்ளது. பார்வையாளர்கள் குறைவதற்கான உண்மையான காரணம் என்ன? மக்கள் டிஜிட்டல் தளங்களுக்கு மாறிவிட்டார்களா அல்லது ஆட்டத்தின் போக்கில் ஆர்வம் குறைந்துவிட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஐபிஎல் நிர்வாகம் தற்போது திட்டமிட்டுள்ளது.