மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் தடையை மீறிச் செல்ல முயன்ற ஈரானின் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி முடக்கியுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலக எரிசக்தி தேவையில்லை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தச் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், ஒரு தூண்டுதல் செயல் என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இரு நாடுகளையும் சமாதானப்படுத்த முயற்சி செய்து வரும் போதிலும், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான இந்த முட்டுக்கட்டை உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
