ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தயாரிப்புக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களை வழங்கியதாக சீனா, ஹாங்காங், துபாய் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா அதிரடித் தடைகளை விதித்துள்ளது.

குறிப்பாக, ஈரானின் ராணுவத் தேவைகளுக்காகச் செயல்பட்ட சீனாவின் ‘யுஷிதா ஷாங்காய்’ மற்றும் துபாயின் ‘எலைட் எனர்ஜி’ போன்ற நிறுவனங்கள் இந்த இடைத்தரகர் வலையமைப்பில் சிக்கியுள்ளன.

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய உதவியதற்காகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான பொருட்களை வழங்கியதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 14-ம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், உலகளாவிய எண்ணெய் விநியோகத் தடையைச் சீர்செய்யவும் அமெரிக்கா இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.

ஈரானின் ராணுவ பலம் மீண்டும் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள அமெரிக்கா, அந்நாட்டிற்கு ஆதரவளிக்கும் மற்ற வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வணிகங்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.