ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் 2025-26 நிதியாண்டில் வருமான வரித்துறை சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த வரி வசூலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனிநபராக அதிக வரி செலுத்தி இரண்டு மாநிலங்களிலும் முதலிடம் பிடித்துள்ளார்.

அவர் எவ்வளவு வரி செலுத்தினார் என்ற விபரத்தை அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ள போதிலும், அவரே டாப் லிஸ்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வரி வசூலில் 70 சதவீதம் டிடிஎஸ் மூலமாகவே கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை ஆணையர் சுதாகர ராவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மற்றும் ஜார்க்கண்டில் சுமார் 5.5 கோடி பேர் பான் கார்டு வைத்திருந்தாலும், வெறும் 40 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள் என்ற தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். போதிய வருமானம் இருந்தும் வரி தாக்கல் செய்யாதவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.