டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். வெறும் 24 இன்னிங்ஸ்களிலேயே 1,000 ரன்களைக் கடந்து, அந்த அணிக்காக அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு ஜே.பி. டுமினி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் 35 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சீசனில் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல், ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 468 ரன்கள் குவித்து டெல்லி அணியின் டாப் ஸ்கோரராக கலக்கி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த அபூர்வ சாதனையை ராகுல் செய்துள்ளார். ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2,548 ரன்களும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 1,410 ரன்களும் எடுத்து அந்த அணிகளின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தார்.

தற்போது டெல்லி அணிக்காக 180 ஸ்டிரைக் ரேட்டுடன் அதிரடி காட்டி வரும் ராகுல், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ரன் வேட்டையிலும் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இதில் அதிகபட்சமாக 152* ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.