ஐபிஎல் தொடரில் தனது அபார ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி, சனிக்கிழமை நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடி காட்டினார். இருப்பினும், குஜராத் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவின் சாதுர்யமான திட்டத்தால் அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

முதலில் களமிறங்கிய வைபவ், தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், வெறும் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். குறிப்பாக, சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி அரங்கத்தை அதிரவைத்தார்.

வைபவ் ஆபத்தான வீரராக உருவெடுத்த தருணத்தில், எல்லையில் நின்றிருந்த குஜராத் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா, பந்துவீச்சாளர் சிராஜிற்கு சைகை மூலம் ஒரு ரகசிய ஆலோசனையை வழங்கினார். “மூளையைப் பயன்படுத்தி பந்துவீசு” அல்லது “பவுன்சர் பந்தை வீசு” என்று அவர் சிக்னல் கொடுத்ததை வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ராவும் சுட்டிக்காட்டினார்.

அடுத்த பந்தையே சிராஜ் மிகச்சரியாக ஒரு ‘ஷார்ட் பிட்ச்’ பவுன்சராக வீசினார். அந்தப் பந்தை எதிர்கொள்ளத் திணறிய வைபவ், காற்றில் பந்தை அடிக்க முயன்று அர்ஷத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சூர்யவன்சியின் பலவீனம் ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகள்தான் என்பது இந்த சீசனில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

தனது பந்துவீச்சை விளாசிய இளம் வீரரின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, முகமது சிராஜ் தனது வழக்கமான ஆக்ரோஷத்தைக் காட்டினார். சத்தமாக கத்தியபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிராஜின் ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், கடந்த போட்டியில் கைல் ஜேமிசன் செய்ததை போல வைபவை அவர் வம்புக்கு இழுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 36 ரன்கள் இன்னிங்ஸின் மூலம், வைபவ் சூர்யவன்சி ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முக்கிய சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார்:

ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இளம் வீரர் என்ற வரிசையில் அபிஷேக் சர்மாவை பின்னுக்குத் தள்ளி வைபவ் முதலிடம் பிடித்தார்.  இளம் வயதில் அதிவேகமாக ரன்களைக் குவித்த வீரர்களில் ஸ்ரேயஸ் ஐயரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடினாலும், ‘ஷார்ட் பிட்ச்’ பந்துவீச்சை எதிர்கொள்வதில் உள்ள குறைபாட்டை வைபவ் சரிசெய்தால் மட்டுமே வருங்காலத்தில் அவர் ஒரு அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.