தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் அணிதிரண்டு வருவது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ சுந்தர், தனது எக்ஸ் (X) தளத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

தமிழகக் குடிமகள் என்ற முறையில் சொல்கிறேன், மக்கள் தங்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அவர் (விஜய்) வழிநடத்த அனுமதிக்கப்பட வேண்டும். மக்கள் யாரை முதல்வராக விரும்புகிறார்களோ, அவரே ஆட்சியில் அமர வேண்டும்என்று பதிவிட்டு விஜய்யின் அதிகாரப்பூர்வ கணக்கையும் டேக் செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஆளுநரின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பதிவில், விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவிப்பிரமாணம் செய்ய முடியாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அவமானம். எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லியுள்ளது, ‘பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ராஜ்பவனில் அல்ல’. இது கட்சி அரசியல் அல்ல, ஒரு இந்தியக் குடிமகனின் குரல்,” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஷால், தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி அமைப்பதாகப் பரவும் செய்திகள் சாமானிய மக்கள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்த நிலையில், தற்போது குஷ்பூ மற்றும் கமலின் ஆதரவு விஜய்க்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில், விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், இன்னும் 10 இடங்கள் குறைவாக இருப்பதால் ஆளுநர் ஆர்லேகர் விஜய்க்கு அனுமதி அளிக்க மறுத்து வருகிறார்.