பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளை அந்தக் கட்சி அழித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கூட்டணி வைத்த கட்சிகளையே அழித்துவிட்டு அந்த இடத்தில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜகவின் ஸ்டைல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக, சிவசேனா, நிதிஷ் குமாரின் ஜேடியு உள்ளிட்ட பல கட்சிகளை பாஜக அழித்தொழித்துள்ளதாக ஒரு நீண்ட பட்டியலையே அவர் முன்வைத்துள்ளார். பாஜக தமிழ்நாட்டை அழிக்கத் துடிப்பதால்தான், அதைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக ஜோதிமணி கூறியுள்ளார்.

காங்கிரஸைப் பொறுத்தவரை எந்தக் கூட்டணிக் கட்சியையும் அழித்துப் பழக்கமில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தைப் பாதுகாக்கும் கடமை தங்களுக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பாஜகவின் அரசியல் போக்கை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.