திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்று சொல்லப்பட்ட திருச்சி மாவட்டம், இந்த சட்டமன்றத் தேர்தலில் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குள்ள 9 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியிருந்த நிலையில், இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையால் அந்த ஆதிக்கம் சரிந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை உள்ளிட்ட 6 தொகுதிகளை தவெக அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. லால்குடி தொகுதியை அதிமுக வென்றுள்ள நிலையில், திமுகவால் திருச்சி மேற்கு மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய 2 தொகுதிகளை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோட்டையில் திமுக சுமார் 19.73 சதவீத வாக்குகளை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 38.61 சதவீத வாக்குகளை அள்ளிய தவெக, திராவிடக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், 50.07 சதவீத வாக்குகளைப் பெற்று பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தவெகவின் இந்த வரவால் திமுக மட்டுமின்றி அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியும் தங்கள் வாக்கு வங்கியில் கணிசமான இழப்பைச் சந்தித்துள்ளன.

திமுக வெற்றி பெற்ற தொகுதிகளிலும் கூட கடந்த முறையை விட வாக்கு சதவீதம் பெருமளவு குறைந்துள்ளது. மொத்தத்தில், திமுகவின் கோட்டையாக இருந்த திருச்சி இப்போது தவெகவின் பக்கம் சாய்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.