தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், அரசியலில் கூட்டணிகள் சேர்வதும் பிரிவதும் இயல்பானது தான் என்று குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலம் திமுக கூட்டணியில் இருந்தபோது சில முரண்பாடுகள் இருந்தாலும், தற்போது தமிழகத்தின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருதி தவெக-வுடன் கூட்டணி சேர காங்கிரஸ் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2014-ல் திமுக தங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றியதை ஒரு அரசியல் நிலைப்பாடாகவே பார்த்தோம் என்றும், அதேபோல் தற்போது காங்கிரஸும் ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திமுக தேர்தலில் தோல்வியடைந்துள்ள இந்தச் சூழலில், நேற்று வரை கூட்டணியில் இருந்துவிட்டு தற்போது அவர்களைக் காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகம் அல்ல என்றும் ஜோதிமணி கூறியுள்ளார்.

அதேசமயம், ராகுல் காந்தியைப் பற்றி அவதூறு பரப்புவதை யாராக இருந்தாலும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று அவர் எச்சரித்துள்ளார். பாஜகவின் பாசிச ஆட்சியை எதிர்க்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி தான் என்பதை நாடு அறியும் என்று குறிப்பிட்ட அவர், பழைய கூட்டணிகள் பிரிந்து புதிய கூட்டணிகள் உருவாவதை ஒரு முதிர்ந்த அரசியல் புரிதலோடு அணுகி, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயணிப்போம் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.