கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 99 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை வீழ்த்தி, இறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.
1957-ல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் கேரளாவில் தொடங்கிய இடதுசாரிகளின் ஆட்சிப் பயணம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்திய வரைபடத்தில் எந்தவொரு மாநிலத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத ஒரு சூழல் இப்போது உருவாகியுள்ளது. மறுபுறம், இடதுசாரிகளின் இந்த வீழ்ச்சியை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடியுள்ளார்.
நாடு முழுவதும் மக்கள் நிராகரித்த கம்யூனிச சித்தாந்தத்தை காங்கிரஸ் கட்சி தத்தெடுக்க முயல்வதாகவும், அந்தக் கட்சி தற்போது ‘நகர்ப்புற நக்சல்களின்’ புகலிடமாக மாறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அழிந்து வரும் ஒரு சித்தாந்தத்தை காங்கிரஸ் கையில் எடுப்பது அக்கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், மக்கள் விரும்பாத கொள்கைகளைத் தழுவுபவர்களைப் பொதுமக்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தனது உரையில் எச்சரித்துள்ளார்.
