மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த முறை 208 இடங்களை அள்ளிய பாரதிய ஜனதா கட்சி, அங்கு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியிலேயே பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

கடந்த முறை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மம்தாவுக்கு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தோல்வி அரசியலில் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மம்தா அரசின் இந்தத் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகப் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் பெரிதும் நம்பியிருந்த சிறுபான்மையின வாக்குகள் சிதறிப் போனது அவர்களுக்குப் பலத்த அடியைக் கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல், வாக்காளர் பட்டியலில் நடந்த திருத்தங்களால் சுமார் 87 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது மற்றும் பல லட்சம் பேர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதும் மம்தாவுக்குப் பாதகமாக முடிந்தது. பவானிபூர் தொகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதே மம்தாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.