மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவாகப் பார்க்கப்பட்டாலும், அறிவியல் ரீதியாக அது ஒரு அற்புதமான உருமாற்றம் என்று புகழ்பெற்ற வானியற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன் விளக்குகிறார். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற வெப்ப இயக்கவியலின் விதியின்படி, மனித உடல் என்பது ஒரு ஆற்றல் களஞ்சியம் மட்டுமே.
ஒருவர் புதைக்கப்படும்போது, உடலில் உள்ள ஆற்றலை மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் உட்கொண்டு, அது தாவரங்கள் மற்றும் மரங்கள் வழியாகப் புதிய உயிர்ச்சக்தியாக மாறுகிறது. அதேபோல், உடல் தகனம் செய்யப்படும்போது, அந்த ஆற்றல் வெப்பமாக மாறி விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பயணிக்கிறது. இதன் மூலம் நாம் இறந்த பிறகும் ஏதோ ஒரு வடிவில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகவே நீடிக்கிறோம்.
நமது உடலை உருவாக்கிய அணுக்கள் ஒருபோதும் அழிவதில்லை; அவை வடிவம் மாறி மண், நீர் அல்லது காற்றுடன் கலந்து மற்றொறு உயிருக்கு ஆதாரமாகின்றன. உதாரணமாக, ஒரு உடல் எரிக்கப்படும்போது வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்கள் விண்வெளியின் ஆழம் வரை ஊடுருவிச் செல்கின்றன.
எனவே, மரணம் என்பது ஒரு இருண்ட முடிவு அல்ல, மாறாக இயற்கையின் சுழற்சியில் நிகழும் ஒரு தொடர்ச்சியான மாற்றம் மட்டுமே. நாம் எங்கிருந்து வந்தோமோ, அதே இயற்கையோடு மீண்டும் வேறு ஒரு வடிவில் இணைந்து கொள்கிறோம் என்கிற இந்த அறிவியல் பார்வை, மரணத்தைப் பற்றிய பயத்தைப் போக்கி ஒரு புதிய தெளிவைத் தருகிறது.
