தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளில், நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதி மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகச் சட்டமன்றச் சபாநாயகரும், திமுகவின் மூத்த தலைவருமான மு.அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் சதீஷ் கிறிஸ்டோபரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இருவருக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், இறுதிச் சுற்றுகளின் முடிவில் சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

​இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன் மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிரிஜா தாமரைப்பாண்டியன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். நான்கு முறை இதே தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த அப்பாவு, தற்போது ஒரு புதிய கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியடைந்தது திமுக முகாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகரின் தோல்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராதாபுரம் தொகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.