தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை கொளத்தூர் தொகுதி வழங்கியுள்ளது. தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலினின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி தவெக வேட்பாளர் வெற்றி வாகை சூடியிருப்பது ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இருவருக்கும் இடையே நிலவி வந்த கடும் போட்டியில், இறுதிச் சுற்றுகளில் வி.எஸ்.பாபுவின் கை ஓங்கியது. ஒரு முதலமைச்சரே தனது சொந்தத் தொகுதியில் தோற்றிருப்பது திமுக முகாமில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், தமிழக அரசியலில் இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தோல்வி தமிழக அரசியலின் போக்கையே மாற்றியமைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வி.எஸ்.பாபுவின் இந்த வெற்றி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
