இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படலாஸ் கல்ரா என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதில், மற்ற நாடுகள் இந்தியாவைப் பார்த்துப் பழக வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார். முதலில், இந்தியாவின் ‘டோர் டெலிவரி’ சேவையைப் பாராட்டிய அவர், மளிகைப் பொருட்கள் முதல் ஐபோன் வரை எதுவாக இருந்தாலும் 10 நிமிடத்தில் வீட்டிற்கே வந்து சேர்வது வெளிநாடுகளில் கற்பனை செய்ய முடியாத ஒன்று எனக் கூறியுள்ளார்.
இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள வீடுகளில் பெட்ரூமுடன் இணைக்கப்பட்ட கழிப்பறை (Attached Bathroom) வசதி மிகவும் வசதியானது என்றும், இது எல்லா நாடுகளிலும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக, பொருட்களின் மீது அச்சிடப்பட்டுள்ள ‘எம்ஆர்பி’ (MRP) விலையைக் குறிப்பிட்ட அவர், அதிகபட்ச விற்பனை விலை எது என்பது நுகர்வோருக்குத் தெரிவதால் இது வெளிப்படையான வர்த்தகத்திற்கு உதவுவதாகப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், “இந்தியாவில் இருப்பவர்களுக்கு இதன் அருமை தெரிவதில்லை, வெளிநாடு சென்றால் தான் இது புரியும்” எனத் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
