உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்த நகர் மாவட்டத்தில், சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’ எடுக்க தண்ணீர் தொட்டி மீது ஏறிய 5 சிறுவர்களில் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். தொட்டியின் உச்சியில் சிக்கிக்கொண்ட மற்ற இரு சிறுவர்கள், 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதாவது சித்தார்த்த நகர் மாவட்டத்தை  சேர்ந்த 5 நண்பர்கள், சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள 60 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காக ஏறியுள்ளனர். அவர்கள் மேலே ஏறிக்கொண்டிருந்தபோது, துருப்பிடித்திருந்த பழைய இரும்பு ஏணி திடீரென உடைந்து விழுந்தது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சித்தார்த் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் விழுந்த ஷனி மற்றும் கோலு ஆகிய இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். இதற்கிடையில், ஏணி உடைந்ததால் மேலே செல்லவும் முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல் பவன் மற்றும் கல்லு ஆகிய இரு சிறுவர்கள் இரும்பு கம்பிகளைப் பிடித்தபடி தொட்டியின் உச்சியில் சிக்கிக்கொண்டனர்.

 

தகவலறிந்து கோரக்பூரிலிருந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF), சனிக்கிழமை இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அப்பகுதிக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாததாலும், பலத்த மழை பெய்ததாலும் மீட்புப் பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. நள்ளிரவு வரை முயற்சி செய்தும் சிறுவர்களை நெருங்க முடியாததால், மாவட்ட நிர்வாகம் மாநில அரசின் மூலம் இந்திய விமானப்படையின் உதவியை நாடியது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில், கோரக்பூர் விமானப்படை தளத்திலிருந்து Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்தது. மோசமான வானிலையிலும், விமானப்படை வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு, சுமார் 15 நிமிடங்களில் தொட்டியின் உச்சியில் இருந்த இரு சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 16 மணி நேரம் மரண பயத்துடன் உயிருக்கு போராடிய சிறுவர்கள் மீட்கப்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்காக  கொண்டு செல்லப்பட்டனர். பலத்த காயமடைந்து மாதவ் பிரசாத் திரிபாதி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மற்ற இரு சிறுவர்களும் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதள மோகத்தால் சிறுவன் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.