உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், பாதுகாப்பாக இருக்க வேண்டிய வீடே ஒரு சிறுமிக்கு நரகமாக மாறியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது தந்தை மற்றும் சித்தப்பாவால் கடந்த சில மாதங்களாகத் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக 14 வயது சிறுமி ஒருவர் அளித்துள்ள புகார் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட சிறுமியை முதலில் அவரது சித்தப்பா ஆசிப் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் உறைந்த சிறுமி, 4 மாதங்களாக இந்த சித்திரவதையைத் தாங்கிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தந்தை பார்மானிடம் அந்தச் சிறுமி அழுது முறையிட்டுள்ளார். ஆனால், மகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே, அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் தாய் ஏற்கனவே தந்தையின் கொடுமை தாளாமல் சில ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளான சிறுமி, எப்படியோ தப்பி ஷாம்லியில் உள்ள தனது தாய்வழி அத்தையிடம் தஞ்சம் புகுந்தார். கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அத்தையின் உதவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், தந்தை பார்மான் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது பாபோக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகின்றன. 2022-ஆம் ஆண்டில் மட்டும் அங்கு பெண்களுக்கு எதிராக 65,700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நெருங்கிய உறவினர்களாலேயே இழைக்கப்படும் இத்தகைய குற்றங்கள் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என காவல்துறை உறுதி அளித்துள்ளது.
