தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகி வரும் வடநாட்டு ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறானவை என்றும், தேர்தலில் அ.தி.மு.க.வே மகத்தான வெற்றி பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் குறித்து கூறியதாவது,

“நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அந்தத் தாக்கம் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்குப் பெரிய மாற்றத்தைத் தராது. அ.தி.மு.க.வே இந்தத் தேர்தலில் முதலிடம் பிடித்து வெற்றி பெறும். தி.மு.க. இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படும். கருத்துக்கணிப்புகள் குறித்துப் பேசிய அவர், கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின்போது அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று கூறின. ஆனால், முடிவுகள் வந்தபோது அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. வடநாட்டுப் பத்திரிகையாளர்கள் எங்கோ அமர்ந்து கொண்டு எடுக்கும் கணிப்புகள் எதார்த்தத்திற்குப் புறம்பானவை. அவர்கள் அனைத்து மக்களிடமும் சென்று கருத்து கேட்பதில்லை. ஊடகங்களுக்கு ஒரு மூன்று நாட்களுக்கு இது ஒரு ‘தீனி’, அவ்வளவுதான்.

மேலும் தமிழக மக்களிடத்தில் மாற்றம் என்பது ஏற்கனவே உருவாகிவிட்டது. அந்த மாற்றம் சத்தமில்லாமல் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு ஓட்டுக்களாகப் பதிவாகி இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்போது இது அனைவருக்கும் தெரியவரும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.