அரை நூற்றாண்டைக் கடந்தும் தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னனாகத் திகழும் இசைஞானி இளையராஜா, தனது ஆரம்பகால இசைப் பயணம் மற்றும் சென்னைக்கு வந்தபோது தனக்கிருந்த அனுபவங்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா, “நான் ஊரை விட்டு கிளம்பும்போதும் சரி, என் அண்ணனின் கச்சேரிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றியபோதும் சரி, எனக்கு முறைப்படி இசை தெரியாது. மும்பை முதல் அகமதாபாத் வரை கச்சேரிகளுக்குச் சென்றோம், ஆனால் அப்போது இசை குறித்த ஆழமான அறிவு எனக்கு இல்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது சென்னை பயணம் குறித்துப் பேசிய அவர், “இசையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் சென்னை புறப்பட்டபோது, என் அம்மா ஒரு பழைய ரேடியோ பெட்டியையும், 400 ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பினார். ‘இந்தப் பணம் போதுமாடா?’ என்று அம்மா கேட்டார். வீட்டுச் செலவுக்குக் கூட பணம் கொடுக்காமல், அம்மா கொடுத்த அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு சென்னை வந்தோம். இப்போதும் நினைத்தால் அது நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
சென்னையில் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்கச் சேர்ந்த இளையராஜா, “அங்கு சென்றபோதும் எனக்கு இசை தெரியாது. மாஸ்டர் என் பெயரைக் கேட்டபோது ‘ராஜையா’ என்றேன். அவர்தான் அந்தப் பெயர் நன்றாக இல்லை எனக்கூறி ‘ராஜா’ என மாற்றினார். நான் ஹார்மோனியம் வாசிப்பதைப் பார்த்துவிட்டு, மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சொன்னார். அப்போதும் நான் முழுமையாக இசையைக் கற்கவில்லை” எனத் தெரிவித்தார்.
பின்பு ஜி.கே. வெங்கடேஷிடம் உதவியாளராகச் சேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட இளையராஜா, “அவர் ஒரே நேரத்தில் வாசித்த 10 மாறுபட்ட மெட்டுகளை (Tunes), நான் அப்படியே நினைவில் வைத்து வாசித்துக் காட்டினேன். வரிசை மாற்றிக் கேட்டபோதும் நான் துல்லியமாக வாசித்ததைப் பார்த்து அவர் மிரண்டு போனார். ‘இன்றைய ஆர்கஸ்ட்ரேஷனை நீயே கவனித்துக்கொள்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அந்தத் தருணமே எனது இசைப் பயணத்தின் முக்கியத் திருப்புமுனை” என்றார். மேலும் இசை தெரியாது என்று தன்னடக்கத்துடன் இளையராஜா பகிர்ந்த இந்தத் தகவல்கள், அவர் எவ்வளவு பெரிய மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அமைந்தன.
