தேசிய தேர்வு முகமை (NTA) நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்; 1:30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. குறிப்பிடத்தக்க மாற்றமாக, இதுவரை அரைக் கை சட்டைகளே அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது முழுக்கை சட்டைகளை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மெல்லிய ரக உடைகளையும், எளிமையான செருப்புகளையும் மட்டுமே அணிந்து வர வேண்டும். தடிமனான அடிப்பாகம் கொண்ட காலணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத நம்பிக்கையின்படி குறிப்பிட்ட ஆடைகளை அணிவோர், கூடுதல் பரிசோதனைக்காக முன்கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெளிப்படையாகத் தெரியக்கூடிய (Transparent) தண்ணீர் பாட்டில்களை மட்டுமே அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.