சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடையை கவனிக்காமல் அதிவேகமாகச் சென்ற இளம்பெண் ஒருவர், ஸ்கூட்டியுடன் காற்றில் பறந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருக்கிறது. அப்போது காரின் இடதுபுறமாக ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டியில் அதிவேகமாக முந்திச் செல்கிறார். துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சாலையில் இருந்த உயரமான வேகத்தடையை அவர் கவனிக்கவில்லை.

அதிவேகத்தில் அந்த வேகத்தடையைக் கடந்தபோது, ஸ்கூட்டி அப்படியே காற்றில் எகிறியது. இதில் சீட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண், ஸ்கூட்டியைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் நிலைதடுமாறி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார். இந்த மொத்தக் காட்சியும் பின்னால் வந்த காரின் டேஷ் கேமில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை ‘எக்ஸ்’ (X) தளத்தில் ‘ஹஸ்னா ஜரூரி ஹை’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. “வேகத்தடையை இப்படி அமைத்தால் ஸ்கூட்டி விமானமாகத்தான் மாறும்” என நக்கலாகக் கேப்ஷன் இடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கும்  என்றும், சாலையில் வேகத்தடை இருப்பதை உணர்த்தும் பெயிண்ட் அடையாளங்கள் இல்லாததும் ஒரு காரணம்” ன்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக வாகனங்களில் டேஷ் கேம்களைப் பொருத்துவது அதிகரித்து வருகிறது. விபத்து காலங்களில் யார் மீது தவறு என்பதை நிரூபிக்க இது போன்ற வீடியோக்கள் ஆதாரமாக அமைகின்றன. அதே சமயம், இது போன்ற விபத்து வீடியோக்கள் வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைகின்றன. மேலும் சாலையில் செல்லும்போது வேகத்தைக் குறைத்து விழிப்புணர்வுடன் செல்வதே உயிரைக் காக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக உள்ளது.