பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ள இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை, அடையாளம் தெரியாத ‘மர்ம நபர்கள்’ குறிவைத்து அழிக்கும் நடவடிக்கை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த இரண்டு முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சஜ்ஜாத் அகமது, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றதை, அவரது அண்டை வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர். சஜ்ஜாத் அகமது நீண்டகாலமாக இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் டாப் கமாண்டர் சல்மான் அசார் மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய உறவினர் மற்றும் வலதுகரமாகச் செயல்பட்டவர். கடந்த வாரம் லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியான ஷேக் யூசுப் அப்ரிடி, கைபர் பக்துன்க்வா பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த மார்ச் மாதம் மசூத் அசாரின் சகோதரர் தாஹிர் அசார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து ‘டார்கெட் கில்லிங்’ (Target Killing) முறையில் மர்ம நபர்கள் கொன்று வருகின்றனர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட முக்கியத் தீவிரவாதிகள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த கொலைகள் குறித்து பாகிஸ்தான் அரசு முறையான விசாரணை நடத்துவதோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதோ இல்லை. தங்கள் மண்ணில் தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) இந்த மரணங்களை மூடி மறைப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் தற்போது லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 10,000 தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு பஞ்சாப், கில்கிட் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு காஷ்மீரின் பகல்காமில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்த அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
