அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டகோ பெல் உணவகத்தில், வெறும் குளிர்பானம் தொடர்பான தகராறில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 27 அன்று மதிய உணவு நேரத்தில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. டி’மாரி பட்டேர்சன் என்ற 20 வயது ஊழியர், உணவகத்திற்கு வந்த மூன்று பெண்களுக்குத் தண்ணீர் குடிக்கக் கோப்பை வழங்கியுள்ளார்.

ஆனால், அவர்கள் தண்ணீருக்குப் பதில் சோடாவை நிரப்பியதால் ஆத்திரமடைந்த பட்டேர்சன், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சியில் தனது துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கிச் சுட்டுள்ளார்.

இதில் ஒரு பெண் சரிந்து விழ, மற்ற இருவர் காயங்களுடன் தப்பிக்க முயன்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தான் தற்காப்பிற்காகவே சுட்டதாகவும் அந்தப் பெண்களிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும் பட்டேர்சன் போலீசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால், விசாரணையில் அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதும், அவரே வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டியதும் தெரியவந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

“>

 

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த ஊழியர் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் நடக்கும் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே மீண்டும் ஒரு பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.