ஐபிஎல் அரங்கில் இந்திய பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கை விமர்சித்த ஹேமங் பதானிக்கு, முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது பதானிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
அதாவது சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், “ஃபிளெமிங் ஒரு நல்ல கோச்சே கிடையாது, தோனி இருந்ததால்தான் அவர் ஜெயித்தாரே தவிர, வேறு எந்த லீக்கிலும் அவர் சாதிக்கவில்லை” என ஹேமங் பதானி அதிரடியாகப் பேசியிருந்தார். மேலும், இந்திய ஆடுகளங்களைப் புரிந்துகொள்ள இந்திய பயிற்சியாளர்களே சிறந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பதானி தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “அடுத்தவங்களைச் சொல்றதுக்கு முன்னாடி உங்க நிலைமையைப் பாருங்க ஹேமங்.. வாயைக் கொடுத்து இப்போ வசமா மாட்டிக்கிட்டீங்களே” எனச் சாடியிருந்தார்.
இந்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின், “உலக கிரிக்கெட்டையே இந்தியா தான் ஆள்கிறது, ஆனால் தரமான இந்தியப் பயிற்சியாளர்கள் எங்கே இருக்கிறார்கள்? வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் நம் ஆட்களுக்குத் தருவதில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பதானி ஐபிஎல்லுக்குப் புதியவர், கிரிக்கெட்டில் தவறுகள் சகஜம் தான்.. நம்ம ஊரு ஆளு பேசிட்டுப் போகட்டுமே, ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?” என பதானிக்கு ஆதரவாகப் பேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.
