ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் ரியான் பராக் கிரிக்கெட் வீரர்களின் ஓய்வறையில் (Dressing Room) மின்னணு சிகரெட் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகள் மற்றும் ‘வேப்பிங்’ கருவிகளுக்கு மத்திய அரசு முழுமையாகத் தடை விதித்துள்ளது. இதன் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவது அரிதாகவே சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் என்றாலும், ஒரு பொதுவெளியில், அதுவும் கேமராக்கள் நிறைந்த கிரிக்கெட் மைதானத்தில் பராக் இத்தகைய செயலில் ஈடுபட்டது சர்ச்சையை விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும், ஐபிஎல் நன்னடத்தை விதிகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஐபிஎல் வட்டாரங்கள் கூறுகையில், பல வீரர்கள் இ-சிகரெட் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள் தான். ஆனால், அவர்கள் யாரும் இவ்வளவு கவனக்குறைவாக ஓய்வறையில் கேமராக்கள் இருக்கும்போது பயன்படுத்த மாட்டார்கள். ரியான் பராக் கேமராவில் சிக்கியிருப்பதால், பிசிசிஐ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,” என்று தெரிவித்துள்ளன.
ஐபிஎல் விதிகளில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு என்று தனியாகத் தண்டனை ஏதும் வரையறுக்கப்படவில்லை. இதனால், இது தொடர்பாக பிசிசிஐ சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று வருவதாகத் தெரிகிறது. ஒரு நட்சத்திர வீரர் இத்தகைய செயலில் ஈடுபடுவது இளைஞர்களிடையே தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்பதால், அவருக்கு அபராதம் அல்லது போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்களின் ஓய்வறையில் கேமராக்கள் பொருத்தப்படுவது குறித்த விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது. 2026 ஐபிஎல் தொடக்கத்திலேயே பல அணிகளின் கேப்டன்கள் இது குறித்துப் புகார் அளித்திருந்தனர். வீரர்கள் உடைகளை மாற்றும் நேரங்களிலும், தனிப்பட்ட தருணங்களிலும் கேமராக்கள் தங்களை கண்காணிப்பது சங்கடமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், நேரடி ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களே இதைத் தீர்மானிப்பதாக பிசிசிஐ கூறி வந்தது.
தற்போது ரியான் பராக் விவகாரத்திற்குப் பிறகு, ஓய்வறைக்குள் கேமராக்கள் வைப்பது குறித்த விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதே சமயம், வீரர் என்ற முறையில் பராக்கின் செயல் தற்காத்துக்கொள்ள முடியாத ஒன்று எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
