ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் அவர் விளாசிய 103 ரன்கள், கிரிக்கெட் விமர்சகர்களையே தலைசுற்ற வைத்தது. இந்த அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்த பாகிஸ்தான் ஆய்வாளர் நௌமான் நியாஸ், “அவரது பேட்டில் ஏதேனும் ஏஐ (AI) சிப் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்க வேண்டும், அந்த அளவுக்கு அவரது நுணுக்கங்கள் அபாரமாக உள்ளன” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் “சூர்யவன்ஷி பேட்டில் சிப் இருக்கிறதா?” என்ற விசித்திரமான விவாதத்தையே கிளப்பியது.

இந்நிலையில், இந்த ‘ஏஐ சிப்’ சர்ச்சை குறித்து வைபவ் சூர்யவன்ஷி தனது மௌனத்தைக் கலைத்து, மிகவும் சாமர்த்தியமான பதிலடி ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எல்லாம் அந்த கடவுள் கொடுத்ததுதான். நான் எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று அவரே என் பேட்டில் எதையோ பொருத்தி அனுப்பியுள்ளார்.

அதைத்தான் நான் இப்போது பயன்படுத்தி வருகிறேன்” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பகிரப்பட்ட இந்த நகைச்சுவையான வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 15 வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான பேச்சும், அபாரமான பேட்டிங் திறமையும் கொண்ட வைபவ், உண்மையிலேயே ஒரு ‘அதிசயப் பிறவி’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“>