பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, வீரர் அடித்த சிக்சரால் பந்து தாக்கி முதியவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது ஓவரில் இச்சம்பவம் நிகழ்ந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர் நாந்த்ரே பர்கர் வீசிய பந்தை, பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா பலமாக அடிக்க, அது சிக்சராக மாறி கேலரியில் இருந்த முதியவர் ஒருவரின் முகத்தில் பலமாகத் தாக்கியது.
இதனால் அந்த முதியவரின் முகத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அருகில் இருந்த ரசிகர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து, ரத்தப் போக்கை நிறுத்த முயன்றனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து விளையாடிய பிரியான்ஷ் ஆர்யா, 11 பந்துகளில் 29 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், இதுவரை 7 போட்டிகளில் 40.42 சராசரியுடன் 283 ரன்கள் குவித்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் சேர்த்தது.
Priyansh Arya six badly injured a man’s head in stands. pic.twitter.com/csNqEadB92
— Selfless⁴⁵ (@SelflessCricket) April 28, 2026
223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு, தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி (16 பந்துகளில் 43 ரன்கள்) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (27 பந்துகளில் 51 ரன்கள்) அதிரடியான தொடக்கம் தந்தனர். இறுதிக்கட்டத்தில் டோனோவன் ஃபெரீரா (26 பந்துகளில் 52*) மற்றும் துபே (12 பந்துகளில் 31*) ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதனால் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் அணி வெற்றியை எட்டியது. மேலும் தோல்வியடைந்த போதிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளைப் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
