இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தின் வீரர்களின் ஓய்வறையில் (Dressing Room) மின்னணு சிகரெட் எனப்படும் ‘வேப்’ (Vape) பயன்படுத்திய காட்சிகள் நேரலையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் முல்லன்பூரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்த விபரீதம் நிகழ்ந்தது. ராஜஸ்தான் அணி 223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் 16-வது ஓவரில் கேமரா ஓய்வறைப் பக்கம் திரும்பியது. அப்போது கேப்டன் ரியான் பராக், சக வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் முன்னிலையில் மிகவும் இயல்பாக ‘வேப்’ கருவியைப் பயன்படுத்தி புகையை வெளியேற்றியது நேரலையில் பதிவானது.

இந்தியாவில் ‘மின்னணு சிகரெட் தடைச் சட்டம் (PECA) 2019’-ன் படி, வேப் அல்லது இ-சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது. முதல் முறை தவறு செய்தால்  1 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தொடர்ந்தால் 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ₹5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

மத்திய சுகாதார அமைச்சகம் 2023-ல் வெளியிட்ட விளக்கத்தின்படி, தனிப்பட்ட முறையில் இதனை வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். ஐபிஎல் விதிமுறை 2.2-ன் படி, ஆட்டத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்படும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ‘மேட்ச் ரெப்ரி’-க்கு அதிகாரம் உண்டு. ஏற்கனவே இந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பி வரும் பராக், தற்போது இந்த சட்ட ரீதியான சிக்கலிலும் மாட்டிக்கொண்டுள்ளார்.

 

சமூக வலைதளங்களில் ரசிகர்கள், “15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி போன்றவர்கள் இருக்கும் அணியில், ஒரு கேப்டனாக இருந்து கொண்டு இவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதா?” என பிசிசிஐ-யை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகமோ அல்லது பிசிசிஐ-யோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை. எனினும், பராக் மீது கடுமையான அபராதம் அல்லது சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.