தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அன்றைய தினம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்கத் தமிழகக் காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக டிஜிபி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவில், வரும் மே 2-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் இருப்பவர்கள் கூட மே 2-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் விடுமுறையை நீட்டிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், மகப்பேறு விடுப்பு மற்றும் கடுமையான மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ரிசல்ட் நேரத்தில் பாதுகாப்புப் பணியில் எவ்விதத் தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக டிஜிபி எடுத்துள்ள இந்த “நோ லீவ்” அதிரடி முடிவு, காவல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
