தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், குழந்தைகளை முன்வைத்து அரசியல் பேசுவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார். “வாக்களிப்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது இருக்கிறது. ஆனால் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டு, அவர்கள் மூலமாகப் பெற்றோர்களிடம் வாக்கு சேகரிக்கச் சொல்வது ஆரோக்கியமான அரசியலல்ல. குழந்தைகளிடம் ‘உங்க அம்மா, அப்பாவிடம் சொல்லி அடம்பிடிங்க’ எனச் சொல்வது அவர்கள் மனதில் தவறான விதையை விதைப்பது போன்றது” என தமிழிசை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், சினிமா கவர்ச்சியைக் காட்டி குழந்தைகளை அரசியலில் பகடைக்காயாகப் பயன்படுத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “மக்களாட்சியில் கருத்துச் சுதந்திரம் இருந்தாலும், பிஞ்சு உள்ளங்களில் அரசியல் நஞ்சைப் புகுத்தக்கூடாது என்பதை விஜய் உணர வேண்டும்” எனத் தெரிவித்த தமிழிசையின் இந்தப் பேச்சு, தவெக மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
