பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி ஷேக் யூனுஸ் அப்ரிதி, ஏப்ரல் 26 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பயங்கரவாதத் தலைவர் ஹபீஸ் சயீதிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட அப்ரிதியின் மரணம், அந்த அமைப்பிற்குப் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அபு கத்தல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அப்ரிதியும் அதே பாணியில் கொல்லப்பட்டுள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட முக்கியத் தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களில் மட்டும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் தாஹிர் அன்வரும் சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மண்ணிலேயே பயங்கரவாதிகள் வரிசையாக வேட்டையாடப்படுவது சர்வதேச அளவில் உளவு அமைப்புகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.