சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி மற்றும் இந்தியாவின் இமயமலை ரயில் பாதைகள் அவற்றின் அழகிற்காகப் புகழ் பெற்றவை. ஆனால், ஆப்பிரிக்க நாடான மௌரித்தேனியாவில் உள்ள ஒரு ரயில் பாதை, முழுக்க முழுக்க ஆபத்துகளுக்காகவே உலகப் புகழ்பெற்றுள்ளது. ‘உலகின் மிக ஆபத்தான ரயில்’ என அழைக்கப்படும் இந்த இரும்புத் தாது ரயிலில், மக்கள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இன்றி இரும்புத் தாதுக்கள் மீது அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

மௌரித்தேனியாவின் சுவாரத்இரும்புச் சுரங்கங்களிலிருந்து நௌவாதிபு துறைமுகம் வரை இந்த ரயில் செல்கிறது. சுமார் 700 கிலோமீட்டர் தூரமுள்ள இந்தப் பயணத்தைக் கடக்க 18 மணிநேரம் ஆகிறது. இந்த ரயில் சுமார் 2 முதல் 3 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக நீளமான ரயில்களில் ஒன்றாகும். ஒரே நேரத்தில் 22,000 டன் இரும்புத் தாதுக்களை ஏற்றிச் செல்லும் இந்த ரயில், உண்மையில் சரக்குப் போக்குவரத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

இந்த ரயிலில் பயணிகளுக்கு எனத் தனிப் பெட்டிகள் கிடையாது. மக்கள் திறந்த நிலையில் உள்ள சரக்குப் பெட்டிகளின் மேலே, இரும்புத் தாதுக் குவியல்களின் மீது ஏறி அமர்ந்து கொள்கின்றனர். ரயிலில் ஏறிய உடனே ஏன் இதனை உலகின் ஆபத்தான பயணம் என்கிறார்கள் என்று எனக்குப் புரிந்துவிட்டது. தலைக்கு மேலே கூரை இல்லை, படுக்கை இல்லை, கழிவறை வசதி கூட இல்லை. சஹாரா பாலைவனத்தின் 50 டிகிரி சுட்டெரிக்கும் வெயில், மணல் புயல் ஆகியவற்றைச் சமாளித்துக்கொண்டு 18 மணிநேரம் அந்த இரும்புக் குவியல் மீதே அமர்ந்திருக்க வேண்டும்,” எனச் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

உள்ளூர் மக்கள் அன்றாடத் தேவைக்காக இந்த ரயிலைப் பயன்படுத்தினாலும், தற்போது உலகெங்கிலும் உள்ள சாகசப் பிரியர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள மௌரித்தேனியாவிற்கு வருகின்றனர். இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் முறை எதுவும் கிடையாது; யார் வேண்டுமானாலும் ரயிலில் ஏறிக்கொள்ளலாம்.

இருப்பினும், போதுமான உணவு, தண்ணீர், போர்வை மற்றும் முகத்தை மறைக்கத் துணிகள் இன்றி இந்தப் பயணத்தை மேற்கொள்வது தற்கொலைக்குச் சமம் என எச்சரிக்கப்படுகிறது. இடையில் ரயில் எங்கும் நிற்காது என்பதால், வழியில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் என்பதே இதன் உச்சகட்ட பயங்கரம். ஆப்பிரிக்காவின் அதிகம் அறியப்படாத மௌரித்தேனியா நாட்டின் இந்த ரயில் பயணம், சுற்றுலாப் பயணிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத – அதே சமயம் நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அனுபவமாகவே உள்ளது.