தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை வைத்துப் பேசியது தற்போது அவருக்குப் பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தனது இறுதிப் பிரச்சாரத்தில், “குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கெஞ்சியோ அல்லது அடம் பிடித்தோ தவெக-விற்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்” என்று விஜய் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிறுவர்கள் அழுதுகொண்டே தங்கள் பெற்றோரை விஜய்க்கு வாக்களிக்க வற்புறுத்தும் வீடியோக்கள் வைரலாகின. இது குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் செயல் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

​இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், தேர்தல் ஆணையத்திற்குப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசியலில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இதற்காக விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை உணர்ச்சி ரீதியாகத் தூண்டிவிடும் வீடியோக்களை உருவாக்குவதையும், பகிர்வதையும் தவெக உடனடியாக நிறுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நெருங்கும் வேளையில், இந்தப் புகார் விஜய்க்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.