ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 18 வயதான இளம் வீரர் சாஹில் பாரக்கிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கியது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், இதுவரை உள்நாட்டு கிரிக்கெட்டில்  அறிமுகமாகவில்லை என்றாலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய திறமைசாலி.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 75 பந்துகளில் 109 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் டெல்லி அணி இவரை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஆனால், சாஹில் பாரக்கிற்கு இந்த அறிமுகப் போட்டி மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாகி டக் அவுட் முறையில் வெளியேறினார். கிரிக்கெட்டில் அதிரடி வீரராக அறியப்படும் சாஹில், படிப்பிலும் படு சுட்டி என்பது குறிப்பிடத்தக்கது; அவர் தனது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவரது தந்தை ராணுவ ஒழுக்கத்துடன் இவரை வளர்த்துள்ள நிலையில், இவரது கிரிக்கெட் பயணத்திற்கு அவரது தாயார் மிகப்பெரிய உறுதுணையாக இருந்து வருகிறார்.