‘காந்தாரா’ திரைப்படத்தின் புனிதமான தெய்வ வழிபாட்டு காட்சியை மேடையில் நையாண்டி செய்த விவகாரத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரம் மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு விழாவில், நடிகர் ரன்வீர் சிங் மேடையில் தோன்றினார். அப்போது அவர், ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ‘தெய்வத்தின்’ சத்தத்தையும், உடல்மொழியையும் நையாண்டி செய்து காட்டினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கன்னட மக்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை ரன்வீர் சிங் புண்படுத்திவிட்டதாகப் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் மீது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்பட்டது. தன்னை கைது செய்யாமல் இருக்கவும், தன் மீதான வழக்கை ரத்து செய்யவும் கோரி ரன்வீர் சிங் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கின் விசாரணையின் போது, ரன்வீர் சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தை முடித்து வைக்க முடிவு செய்தது. மேலும், வரும் நான்கு வாரங்களுக்குள் மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என ரன்வீர் சிங்கிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சர்ச்சை குறித்து ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட விளக்கத்தில், ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பைக் பாராட்டுவதற்காகவே நான் அப்படிச் செய்தேன்.
மற்றபடி யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. எனது செயலால் யாராவது புண்பட்டிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த சர்ச்சை குறித்துப் பேசிய ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி, “திரைப்படத்தில் அது ஒரு நடிப்பு என்றாலும், தெய்வ வழிபாடு என்பது எங்களுக்கு மிகவும் புனிதமானது. அதனை மேடைகளில் கேலி செய்வதையோ அல்லது அரங்கேற்றுவதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், ரன்வீர் சிங் நடித்துள்ள சமீபத்திய ‘துரந்தர் 2’ (Dhurandhar 2) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அவரது நடிப்பை ரிஷப் செட்டி பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
