அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்படுவது குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஏற்ப பாகிஸ்தான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்று, அமெரிக்காவால் எழுதப்பட்ட ‘வரைவு’ என சர்ச்சை எழுந்த நிலையில், ஈரான் தரப்பில் இருந்து இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் ஒரு தகுதியான அல்லது நடுநிலையான மத்தியஸ்தராக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட ஈரான் எம்பி, அந்த நாடு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதாகச் சாடினார்.

மேலும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகள் நம்பகத்தன்மை அற்றவை என்றும், அதன் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்கா அதனைத் தன் விருப்பப்படி இயக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தானின் தலையீடு எந்த அளவிற்குப் பலன் தரும் என்பது தற்பொழுது கேள்விக்குறியாகி உள்ளது.