தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அவற்றை பார்வையிடத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாதுகாப்பு மையத்திற்குத் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “திமுக தோல்வியடையப் போகிறது என்று தெரிந்தாலே வன்முறையில் ஈடுபடுவது அவர்களின் வழக்கம். துறைமுகம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு 30 ரவுடிகளுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டார். தவெக வேட்பாளர் அசோக் குமார் மற்றும் வழக்கறிஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மேலும், “திமுகவினர் வாக்குக்கு 5,000 ரூபாய் கொடுப்பதை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்; ஆனால் தவெக தலைவர் விஜய் சொன்னது போல, எங்கள் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த மாற்றம் மே 24-ல் தெரியும்” என அவர் ஆவேசமாகப் பேசினார்.
