திருப்பதி அருகே சிமெண்ட் கடை நடத்தி வந்த மோகன் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதால் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். கடனை அடைக்கத் தனது சொத்துக்கள் மற்றும் மனைவியின் நகைகளை விற்றதோடு, லாட்டரி சீட்டுகளிலும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, ஆத்திரத்தில் தனது மனைவி ஹரிதா மற்றும் தாய் சந்திரகலாவை வீட்டில் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தனது 14 வயது மகன் மற்றும் 12 வயது மகளை “உறவினர் இறந்துவிட்டார்” என்று பொய் சொல்லி பைக்கில் அழைத்துச் சென்றார்.
இரவு நேரத்தில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றபோது, தடுத்த குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து இழுத்துக்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதி தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளும் உடல் சிதறி பலியாகினர். ஆன்லைன் ரம்மியால் ஒரு முழுக் குடும்பமே அழிந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
