அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாட்டு ராணுவத்திற்கு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தச் சூழலில், ஈரானுக்கு அருகே உள்ள ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் புதிதாக ஏதேனும் கப்பல்கள் கண்ணிவெடிகளை வைப்பது தெரிந்தால், யாரிடமும் அனுமதி கேட்காமல் அந்தக் கப்பலை உடனடியாகச் சுட்டு வீழ்த்துமாறு டிரம்ப் தனது படைகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் போர் மேகம் மீண்டும் சூழ்ந்துள்ளது. ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக நடக்கும் போக்குவரத்து தங்களுக்கு முக்கியம் என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கும் நிலையில், அந்தப் பாதையை மூடிவிடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே ஈரான் அந்தப் பகுதியில் பல கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், டிரம்பின் இந்த “கப்பலைத் தகர்க்கும்” உத்தரவு நேரடியாக ஈரானை எச்சரிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த அதிரடி முடிவால் ஈரான் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, உலகப் பொருளாதாரத்திலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

டிரம்ப் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.